போலி தேன் விற்பனை
கொடைக்கானலில் போலி தேன் விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில், கொட்டிக்கிடக்கும் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை குறி வைத்து தேன் விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதை, கொடைக்கானல்-பழனி மலைப்பாதையோரங்களில் தேன் விற்பனையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஒரு லிட்டர் தேன் ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதில் பெரும்பாலானோர் ரசாயன மூலப்பொருட்களை சேர்த்து நிறத்தை மாற்றி சர்க்கரை பாகுவை கலந்து, அடைகள் மீது அதனை ஊற்றி போலி தேன் தயாரித்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அறியாத சுற்றுலா பயணிகள், அவர்களிடம் இருந்து தேனை வாங்கி செல்கின்றனர். இதனை பயன்படுத்தும்போது சுற்றுலா பயணிகளுக்கு உடல் உபாதை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொடைக்கானலில் போலி தேன் விற்பனையில் ஈடுபடுவோர் மீது உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானலில், போலி தேன் விற்பனைக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.