போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை
கோத்தகிரி
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட நெடுகுளா-2 கிராம நிர்வாக அலுவலர் திலகவதி, கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணனிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா கிராமத்தை சேர்ந்த முத்தன் என்பவரது மனைவி சுந்தரி. அவரது மகன் மோகன். இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் ஒரு ஏக்கர் 3 சென்ட் நிலம் உள்ளதாக போலியான நில உரிமை சான்று தயாரித்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது மகனுக்கு சுந்தரி விடுதலை பத்திரம் பதிவு செய்து கொடுத்து உள்ளார். இதைத்தொடர்ந்து மோகன் அந்த நிலத்திற்கு சிட்டா நகல் மற்றும் ஆர்.எஸ்.ஆர். ஆகிய ஆவணங்களை போலியாக தயார் செய்து வேறு ஒருவருக்கு கடந்த 6-ந் தேதி கிரையம் செய்து கொடுத்துள்ளார். எனவே அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து, நிலத்தை விற்பனை செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்று கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், இது சம்பந்தமாக அரசு வக்கீல் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் அறிவுரைகளை பெற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.