எலுமிச்சை பழம் கிலோ ரூ.10-க்கு விற்பனை
எலுமிச்சை பழம் கிலோ ரூ.10-க்கு விற்பனையானது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி, பெரியாளூர், பாண்டிக்குடி உள்பட கீரமங்கலத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை உள்ளிட்ட தோப்புகளில் ஊடு பயிராக எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 5 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுரை உள்பட பல பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கைகாட்டி, மறமடக்கி உள்ளிட்ட ஊர்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு இருப்பதால் ஒரு கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது குளிர்பானங்களின் விற்பனை குறைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக படிப்படியாக விலை குறைந்து எலுமிச்சை கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றனர்.