செம்பட்டி போலீஸ் நிலையம் முற்றுகை


செம்பட்டி போலீஸ் நிலையம் முற்றுகை
x

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக, செம்பட்டி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள மல்லையாபுரத்தில் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 28-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை திருவிழா நடந்தது. திருவிழாவின் கடைசி நாளில், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காளிதாஸ் (வயது 21) படுகாயம் அடைந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லையாபுரத்தை சேர்ந்த சேதுபதி, சின்னபாண்டி, மோகன், மன்மதன், கருப்பு ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அஜித், அருண்பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல், கடந்த 28-ந்தேதி திருவிழா தொடங்கிய நாளில் மொக்கவீரன் மகன் அஜித் (20) என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மொக்கவீரன் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காளிதாஸ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித்ைத தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது தரப்பினர் செம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செம்பட்டியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story