பாதியில் நிறுத்தப்பட்ட நரிக்குறவர்கள் கைவினை பொருட்கள் விற்பனை வளாகம்
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் பாதியில் நிறுத்தப்பட்ட நரிக் குறவர்கள் கைவினை பொருட்கள் விற்பனை வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நரிக்குறவர் குடும்பங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு ஒன்றியங்கள் மற்றும் செங்கம் பேரூராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக கந்தசாமி இருந்த போது திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் நரிக்குறவர்களின் கைவினை பொருட்களை விற்பனை செய்யும் வகையில் விற்பனை வளாகம் அமைக்க ஏற்பாடு செய்தார்.
இதன் மூலம் அவர்களின் உற்பத்தி பொருட்கள் தரமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதற்காக அண்ணா நுழைவு வாயில் அருகில் திருவண்ணாமலை சாலையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் நரிக்குறவர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மாநில திட்ட குழுவினால் ரூ.40 லட்சம் மதிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு நரிக்குறவர்களின் கைவினை பொருட்கள் விற்பனை செய்ய விற்பனை வளாகம் அமைக்கும் பணி நடைபெற்றது.
பாதியில் நின்றது
இந்த விற்பனை வளாகத்தில் 10 கூடாரங்கள் அமைக்கப்பட்டு அதிலேயே பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் சேமிப்பு கிடங்கும் சேர்த்து கட்டப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அந்த விற்பனை வளாகம் கட்டுமான பணி கூடாரங்களுடன் நிறுத்தப்பட்டு சுற்றி சுற்று சுவர் அமைக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த விற்பனை வளாகம் எந்தவித பயன்பாட்டிலும் இல்லாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இதன் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கத்தில் செயல்பாட்டில் கொண்டு வருவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது இந்த விற்பனை வளாகத்தை சுற்றி சுற்று சுவர், மின்கம்பம், தரை தளம் அமைக்க விவரங்கள் சேகரிக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் மாதக்கணக்கில் ஆகியும் அங்கு எந்த பணியும் நடைபெற்ற மாதிரி தெரியவில்லை.
சமூக விரோதிகளின் கூடாரம்
தொடர்ந்து பயன்பாட்டிற்கு அதனை கொண்டு வர அதிகாரிகள் முயற்சி செய்யாததால் அதிகளவில் புதர்கள் மண்டி காணப்படுகிறது. இரவு நேரங்களில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் அமர்ந்து மது அருந்த மிகவும் வசதியாக உள்ளதால் மது பிரியர்கள் அங்கு இரவு நேரங்களில் தஞ்சம் அடைகின்றனர்.
மேலும் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த இடம் மெயின் ரோட்டில் அமைந்து உள்ளதால் இரவு நேரங்களில் சாலையில் தனியாக கிரிவலம் செல்லும் பக்தர்களும், பொதுமக்களுக்கு அச்சம் அடைகின்றனர்.
இந்த விற்பனை வளாகம் நரிக்குறவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இயலாத நிலை ஏற்பட்டதால் அரசு மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தலாமே. ஏன் இவ்வாறு போட்டு வைத்து உள்ளனர் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட நரிக்குறவர்கள் கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்தை முழுமையாக கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.