தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
விழுப்புரத்தில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோருக்கென அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர்- பிசின்ஸ் சாம்பியன்ஸ் - என்ற தனிச்சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இத்திட்டத்தில் வேளாண்மை தவிர்த்து, பிற அனைத்து உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைத்தொழில்களுக்கு மானியம் வழங்கப்படும். மொத்த திட்டத்தொகையில் 35 சதவீத மானியத்தொகையாகும். வங்கிக்கடன் பெற விரும்பினால், மீதமுள்ள 65 சதவீத வங்கி கடனாகப்பெற ஏற்பாடு செய்யப்படும். புதிதாக தொழில் தொடங்குவோர் மட்டுமல்லாது, ஏற்கனவே இயங்கிக்கொண்டுள்ள தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்தவும், தொழில் ரீதியாக மேம்படுத்தவும் மானிய உதவி பெறலாம். எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள அனைவரும் மாவட்ட தொழில் மையத்தை அணுகி, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றார். இக்கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன் மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் கலந்துகொண்டனர்.