குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. பரப்பிரம்மம் அறக்கட்டளை நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார அமைப்பின் அரியலூர் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு கருத்தரங்கின் நோக்கவுரையாற்றி விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டு குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப்பணியாளர் ராஜேஸ்வரி கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இன்றைய குழந்தை தொழிலாளர் நிலை குறித்தும், மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்தும் பேசினார். அதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புற தொடர்பு பணியாளர் ஜெயகாந்தி குழந்தை தொழிலாளர்கள் சந்திக்கும் உடல், உளவியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும், குழந்தை தொழிலாளர் முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான செயல் உத்திகள் குறித்தும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விளக்கி பேசினார். மேலும் குழந்தைகள் உதவி மைய (சைல்ட் லைன்) ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் குழந்தை தொழிலாளர் சட்டம், குழந்தைகளுக்கான தேசிய, மாநில கொள்கைகள், பள்ளி மேலாண்மைக்குழு, கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு, குழந்தை தொழிலாளர் தொடர்பான புகார் அளித்தல் நடைமுறை, மீட்பு, மறுவாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். முன்னதாக தர்மராஜ் வரவேற்றார். முடிவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சூர்யகலா நன்றி கூறினார்.