தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம் குறித்த கருத்தரங்கம்
கொடைக்கானலில் தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
தேசிய தோட்டக்கலை வாரியத்தின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்த பயிற்சி கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. பயிற்சியில் தேசிய தோட்டக்கலை வாரிய துணை இயக்குனர் ராஜா கலந்து கொண்டு பேசினார். அதில் 5 ஏக்கருக்கு மேல் ேதாட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இவையில்லாமல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பசுமை குடில்கள் அமைத்தல், தோட்டக்கலை பயிர்களான வெள்ளரி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கொய்மலர்களான ரோஜா, லில்லியம், காரனேசன், ஜெர்பரா ஆகியவற்றுக்கு 2 ஆயிரத்து 50 சதுர மீட்டருக்கு மேல் பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் அறுவடைக்கு பின்னர் தொடக்க கால பதனிடுதல், பழங்களை பழுக்க வைக்கும் கூடங்கள், குளிரூட்டு வசதியுடன் கூடிய வாகனங்கள், குளிர்சாதன அறை உட்பட பல்வேறு திட்டங்களுக்கு 35 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்றார். இந்த கருத்தரங்கத்தில் மாவட்ட வன அலுவலர் திலீப், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, தோட்டக்கலை அதிகாரி சைனி திவ்யா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் ரவீந்திரன் வரவேற்றார். பயிற்சிகான ஏற்பாடுகளை கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.