உதயகிரிகோட்டையில் பாதுகாக்கப்பட்டு வந்தஅரிய வகை கழுகு சென்னைக்கு அனுப்பி வைப்பு


உதயகிரிகோட்டையில் பாதுகாக்கப்பட்டு வந்தஅரிய வகை கழுகு சென்னைக்கு அனுப்பி வைப்பு
x

தக்கலை அருகே உதயகிரிகோட்டையில் பாதுகாக்கப்பட்டு வந்த அரியவகை கழுகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உதயகிரிகோட்டையில் பாதுகாக்கப்பட்டு வந்த அரியவகை கழுகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரியவகை கழுகு

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் வீசிய போது சினேரியஸ் இனத்தை சேர்ந்த அரிய வகை கழுகு காற்றில் அடித்து வரப்பட்டு ஆசாரிபள்ளம் அருகில் கீழே விழுந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த கழுகை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து தக்கலை அருகில் உள்ள புலியூர்குறிச்சி, உதயகிரிகோட்டை பூங்காவில் கடந்த 5 ஆண்டுகளாக பராமரித்து வந்தனர். இந்த கழுகை ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் இருக்கும் கழுகுகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்வது என வனத்துறையினர் முடிவு செய்தனர்.

முதற்கட்டமாக சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக நேற்று கழுகை பைபர் கூண்டுக்குள் அடைத்து ஏ.சி.காரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரில் களக்காடு புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் மனோகரன், கழுகை பராமரித்து வந்த வன ஊழியர் ராஜா ஆகியோரும் சென்றனர். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி அலுவலர் மனாசிர் ஹலீமா, பூதப்பாண்டி வனச்சகர ஊழியர்கள் உடனிருந்தனர்,

விமானம் மூலம் செல்கிறது

சென்னை வண்டலூர் பூங்காவிற்கு சென்றதும் அங்கு 3 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் வருகிற 3-ந் தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம், ஜோக்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இந்தவகை கழுகுகள் ரஷியா, சீனா போன்ற நாடுகளில்தான் வாழ்வதாகவும், இது குளிர்காலத்தில் அங்கிருந்து இடம்பெயர்ந்து ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு வந்த போது திசை மாறி குமரி மாவட்டத்திற்கு வந்திருக்கலாம் என அலுவலர் இளையராஜா தெரிவித்தார்.


Next Story