வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி மாணவர்களிடம் ரூ.3 ஆயிரம் கேட்கும் மர்மநபர்


வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி  மாணவர்களிடம் ரூ.3 ஆயிரம் கேட்கும் மர்மநபர்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி மாணவர்களிடம் ரூ.3 ஆயிரம் கேட்டு மோசடியில் ஈடுபடும் மர்ம நபரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்

கடலூர்:

ஆன்லைனில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதை கட்டுப்படுத்த சைபர் கிரைம் போலீசார் முயற்சி செய்வதற்குள் புதிது, புதிதாக ஆன்லைன் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செய்து வருகிறது.

சீஷனுக்கு தகுந்தாற்போல் திட்டங்களை வகுத்து சதி வேலையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை மையமாக வைத்து ஒரு கும்பல் 50 ஜி.பி. டேட்டாவை இலவசமாக வழங்கி வருவதாக கூறி மோசடி செயலை செய்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் ஒரு புதிய யுக்தியை தற்போது கையாண்டு உள்ளது. ஆம், நேற்று கடலூரில் உள்ள சில மாணவர்களுக்கு மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசி, உங்களுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது. நீங்கள் அதை வாங்க ரூ.3 ஆயிரம் ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை

இது பற்றி விசாரித்தபோது, கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஒரு மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், நான் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன். உங்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.14,500 வந்துள்ளது. அதை உங்களுக்கு அனுப்ப வேண்டுமானால், அதற்கு ரூ.3 ஆயிரம் எனக்கு ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் அதே பள்ளியில் படித்து, கல்லூரிக்கு சென்ற மாணவர்களிடமும் அந்த நபர் பேசி உள்ளார். அதோடு ஏற்கனவே ஒரு மாணவிக்கு பணம் அனுப்பியதாக கூறி, அந்த தகவலை மாணவர்களின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பி நம்ப வைத்துள்ளார்.

உஷாரான மாணவர்கள்

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவி ஒருவருக்கும் அனுப்பி உள்ளார். இதனால் உஷாரான அந்த மாணவர்கள், தங்களுக்கு பள்ளியில் பாடம் எடுத்த ஆசிரியரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு அவர், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு மூலம் உதவித்தொகை வழங்கினால், உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவார்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இதனை தொடா்ந்து மாணவர்கள் அந்த மர்ம நபருக்கு பணத்தை அனுப்பவில்லை.

இருப்பினும் இதேபோல் மற்ற மாணவர்களிடமும் பேசி, அந்த மர்ம நபர் பணத்தை மோசடி செய்துள்ளாரா? என்று தெரியவில்லை. மாணவர்களின் பெயர்கள், அவர்களின் செல்போன் எண்களை அந்த மர்ம நபர் எப்படி? எடுத்தார். அவருக்கு அந்த தகவல்களை கொடுத்தது யார்? என்ற விவரம் தெரியவில்லை.

கைது செய்ய வேண்டும்

இதுபற்றி மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு, இதை தடுக்க வேண்டும். சைபர் கிரைம் போலீசாரும் இதனை கவனமாக கையாண்டு மோசடி சம்பவத்தை தடுத்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் கடலூரில் மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story