திருக்கல்யாண சீர்வரிசை பொருட்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அனுப்பி வைப்பு
சோலைமலைமுருகன் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை பொருட்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அழகர்கோவில்,
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று(சனிக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில் இருந்து 25 வகையான திருக்கல்யாண சீர்வரிசை பொருட்கள் நேற்று மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் புறப்பட்டது. அதில் பூரண கும்பம், மா, பலா, வாழை, உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள், அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, திருமாங்கல்யம், உள்ளிட்ட மங்கல பொருட்கள், பட்டுப்புடவை, கண்ணாடி வளையல்கள் போன்ற பொருட்கள் இருந்தன. இதில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு மாலைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களும், வேன் மூலம் ஏற்றி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், பேஷ்கார், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.