வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு 40 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பி வைப்பு
வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு 40 டன் பிளாஸ்டிக்கு குப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் குப்பைகள் பெறப்படுகிறது. இந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுகின்றனர். மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகள், மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள், பாட்டில்கள், டயர்கள் என தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.
இதில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூரில் உள்ள சிமெண்டு உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களையொட்டி அவர்கள் இந்த குப்பைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் என்ற பகுதியில் உள்ள சிமெண்டு உற்பத்தி தொழிற்சாலைக்கு குப்பைகள் அனுப்பப்பட்டு வருகிறது.
அரியூரில் உள்ள நுண்ணுயிர் உரம் மையத்தில் இருந்து மறுசுழற்சி செய்ய முடியாத சுமார் 40 டன் குப்பைகள் ஆந்திர மாநிலத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆய்வு செய்தார்.
இந்த குப்பைகள் வேலூர் மாநகராட்சி 2,3,4 ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை சிமெண்டு தொழிற்சாலையினர் எரிபொருளாக பயன்படுத்த உள்ளனர் என்று அவர் கூறினார்.