விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விருத்தாசலம்,
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த 24-ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை முடிந்து நாளை (திங்கட் கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால், 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மேலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இருப்பு வைப்பு
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 3-ம் பருவத்துக்கான விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்கப்பட உள்ளது. இதற்காக புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகளில் புத்தகங்கள் கடந்த வாரம் கொண்டுவந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.
141 பள்ளிகளுக்கு அனுப்பும் பணி
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 141 பள்ளிகளுக்கு தேவையான 3-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
அந்த பாடப்புத்தகங்கள் சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தது.
இந்த பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் துரைப்பாண்டியன் உடன் இருந்தார்.