ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை காக்க மூத்த வக்கீல்களை அமர்த்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை காக்க மூத்த வக்கீல்களை அமர்த்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை காப்பதற்கு மூத்த வக்கீல்களை அமர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி கங்காப்பூர்வாலா, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கு வரும் 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் அனைத்து நியாயங்களும் தமிழ்நாட்டின் பக்கம் தான் உள்ளன. தங்கள் தரப்பில் நியாயமில்லை என்றாலும் கூட, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இந்தியாவின் புகழ்பெற்ற வக்கீல்களை தங்களுக்காக வாதிடுவதற்கு அமர்த்தியுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் முகுல் ரோகத்கி, அபிஷேக் மனு சிங்வி, அரியமா சுந்தரம், சஜன் பூவய்யா ஆகியோர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆதரவாக வாதிட்டிருக்கின்றனர். மூத்த வக்கீல்களான சதீஷ் பராசரன், மணி சங்கர் ஆகியோர் அடுத்தக்கட்ட விசாரணையில் சூதாட்ட நிறுவனங்களுக்காக வாதிடவிருக்கின்றனர். எதிர்தரப்பில் தலைசிறந்த வக்கீல்கள் நேர் நிற்பதால் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசும் மூத்த வக்கீல்களை அமர்த்த வேண்டும்.

தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை காப்பதற்கு தமிழக அரசு செய்ய வேண்டிய ஒரே செயல், ஆன்லைன் சூதாட்டம் திறமை விளையாட்டு அல்ல, அதிர்ஷ்டத்தின் விளையாட்டு தான் என்பதை நிரூபிப்பது மட்டும் தான். இந்த உண்மையை நீதிபதிகள் உணரும் வகையில் வலியுறுத்தினாலே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை பெறமுடியும். அதற்கு சிறந்த சட்ட வல்லுனர் தேவை. ஆன்லைன் சூதாட்டம் ஆள்கொல்லி விளையாட்டு என்பதையும் நீதிமன்றத்திற்கு நிரூபிக்க வேண்டும். 2014-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி, 2020-ம் ஆண்டு நவம்பர் வரை 60-க்கும் மேலானோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டனர்.

ஆனால், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருந்த 2020 நவம்பர்- 2021 ஆகஸ்டு வரையிலான 10 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒருவர் கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதேநேரத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு 2021 ஆகஸ்டு முதல் 2023 ஏப்ரல் வரையிலான 20 மாதங்களில் 49 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்களை நீதிமன்றத்தில் வலியுறுத்தி ஆள்கொல்லி சூதாட்டம் தடை செய்யப்பட்டது சரி தான் என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

மூத்த வக்கீல்கள்

இதற்காக, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் சிலரை தமிழக அரசின் சார்பில் வாதிடுவதற்காக அமர்த்த வேண்டும். தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story