மூத்த குடிமக்கள் அவையினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூத்த குடிமக்கள் அவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை ரெயில்வே ஜங்ஷன் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூத்த குடிமக்கள் அவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மூத்த குடிமக்கள் அவை பொருளாளர் கலியபெருமாள் வரவேற்றார். இதில் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் சாமி.கணேசன், முருகேசன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை-திருச்சி இடையே காலை 8.15 மணிக்கு இயக்கப்படும் திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் இயக்க வேண்டும். முதியோர், நோயாளிகள் நலனை கருத்தில்கொண்டு மயிலாடுதுறை ஜங்ஷனில் பேட்டரிகார்களை உடனடியாக இயக்க வேண்டும். அனைத்து நடைமேடைகளிலும் ரெயில்பெட்டிகளில் மின்னணு போர்டுகளை அமைக்க வேண்டும். பகல் நேரத்தில் மயிலாடுதுறை-சென்னை முன்பதிவில்லா ரெயில் இயக்க வேண்டும். மூத்தகுடிமக்களின் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டைவழி பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.