செங்குளம் கண்மாயை கலெக்டர் ஆய்வு
கழிவுநீரால் மாசடைந்து வரும் செங்குளம் கண்மாயை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகாசி,
கழிவுநீரால் மாசடைந்து வரும் செங்குளம் கண்மாயை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.
செங்குளம் கண்மாய்
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் செங்குளம் கண்மாய் உள்ளது. 37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய்க்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது உண்டு. இந்த கண்மாயின் ஒரு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் பெற்று திருத்தங்கல் பகுதிக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த கண்மாயின் ஒரு பகுதியில் கழிவுநீர் கலந்து வருகிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கண்மாய் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. கண்மாயில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், சிவகாசி மாநகராட்சியின் 9-வது வார்டு கவுன்சிலருமான சுதாகரன், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார்.
பறவைகள் சரணாலயம்
இந்தநிலையில் கலெக்டர் ஜெயசீலன் செங்குளம் கண்மாயை நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண்டல தலைவர் குருசாமி, கண்மாயில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கண்மாயை சுற்றி உள்ள பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற் கொள்ளும் வகையில் நடைபயிற்சி மேடை அமைக்க வேண்டும்.
இங்கு எண்ணற்ற பறவைகள் வந்து செல்வதால் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ஜெயசீலன் உறுதி அளித்தார். அப்போது கவுன்சிலர் துரைப்பாண்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.