சென்னையில் பரபரப்பு சம்பவம்: கோர்ட்டுக்கு வேனில் வந்த கைதிகளுக்கு கஞ்சா பொட்டலங்கள் வீச்சு


சென்னையில் பரபரப்பு சம்பவம்: கோர்ட்டுக்கு வேனில் வந்த கைதிகளுக்கு கஞ்சா பொட்டலங்கள் வீச்சு
x

வேனில் அழைத்துவரப்பட்ட கைதிகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்து கஞ்சா பொட்டலங்களை வீசிய ஆசாமியை போலீசார் விரட்டி பிடித்தனர். சென்னையில் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை,

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை, வழக்கு விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து வருவது வழக்கம். வழக்கு விசாரணை முடிந்த பின்னர் அந்த கைதிகள் மீண்டும், வேனில் அழைத்து செல்லப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அதுபோல நேற்று முன்தினம் எழும்பூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளை மீண்டும், வேனில் ஏற்றி போலீசார் புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு கைதிகளை ஏற்றி வந்த போலீஸ் வேனை பின்தொடர்ந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

கஞ்சா பொட்டலங்கள் வீச்சு

சினிமா காட்சியை மிஞ்சுவதுபோல, வேனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்தது. பின்னர் வேனை நெருங்கி வந்த மோட்டார் சைக்கிள் நபர்கள், திடீரென்று கற்களை வீசுவது போல, வேனுக்குள் கஞ்சா பொட்டலங்களை சரமாரியாக வீசினார்கள். வேனில் இருந்த கைதிகள், விழுந்த கஞ்சா பொட்டலங்களை குனிந்து, குனிந்து பொறுக்கினார்கள்.

இந்த காட்சியை காவலுக்கு வந்த போலீசார் பார்த்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த போலீசாரும் சினிமா காட்சியில், பறந்து செல்வது போல, வேனை விட்டு இறங்கி கஞ்சா பொட்டலங்களை வீசிய ஆசாமிகளை விரட்டி பிடித்தனர். அதில் ஒரு ஆசாமி போலீஸ் கையில் மாட்டினார். இன்னொரு ஆசாமி போலீசை தள்ளி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட ஆசாமி யார்?

பிடிபட்ட ஆசாமி அருகில் இருந்த பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். வேனுக்குள் வீசப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும், பிடிபட்ட ஆசாமி வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீசார், பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு, கைதிகளுடன் வேனில் சென்றனர்.

சென்னை பெரியமேடு பகுதியில் ரிப்பன் மாளிகை அருகே இந்த சம்பவம் நடந்தது. நடுரோட்டில் நடந்த இந்த காட்சி சினிமா படப்பிடிப்பு போல இருந்தது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இந்த பரபரப்பான காட்சியை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். போலீசாரிடம் பிடிபட்ட ஆசாமியின் பெயர் பச்சமுத்து (வயது 25). இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் கஞ்சா வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய அன்பழகன் என்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story