சென்னை அருகே பரபரப்பு சம்பவம்: பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு


சென்னை அருகே பரபரப்பு சம்பவம்: பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
x

சென்னையை அடுத்துள்ள படப்பை அருகே பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாட்டு வெடிகுண்டுகளை வீசி போலீஸ்காரரை அரிவாளால் வெட்டியதால் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் எருமையூர் பகுதியை சேர்ந்தவர் சச்சின் (வயது 25). பிரபல ரவுடியான இவர், படப்பை, சோமங்கலம் ஆகிய பகுதியில் வழிப்பறி, வியாபாரிகள், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், கட்ட பஞ்சாயத்து போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஆரம்பத்தில் சாதாரண ரவுடியாக வலம் வந்த சச்சின் தற்போது பெரிய ரவுடியாக தன்னை காட்டி கொள்ள ஆசைப்பட்டார். தனக்கு எதிராக யாரும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய ரவுடியாக வளரக் கூடாது என்பதற்காக தனக்கு எதிராக உள்ள ரவுடிகளை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு செயல்பட்டு வந்தார். ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை ஒழித்துக்கட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரவுடிகளை வேட்டையாடி பிடித்து வந்தனர்.

இதனால் ரவுடி சச்சின் தனது இருப்பிடத்தை தாம்பரம் கமிஷனர் அலுவலக பகுதிக்கு மாற்றினார். இந்த தகவல் தாம்பரம் உளவுப்பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ரவுடி சச்சினை வேட்டையாடி பிடிக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

காட்டுப்பகுதியில் பதுங்கல்

சச்சினின் நடமாடத்தை தனிப்படை போலீசார் பல குழுக்களாக பிரிந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவர், சோமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள காட்டு பகுதியில் கூட்டாளி பரத்துடன் பதுங்கி இருக்கும் தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. தனிப்படை போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் சச்சினும், பரத்தும் அதிர்ச்சி அடைந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்கள். இந்த தகவல் தாம்பரம் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வயர்லஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சோமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை 2 பேரும் வீசினர். நல்ல வேளையாக அந்த வெடிகுண்டு போலீசார் மீது வெடிக்கவில்லை.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அவர்கள் 2 பேரையும் சரண் அடைய வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால் 2 பேரும் சரண் அடையவில்லை. மீண்டும் 2 வெடிகுண்டுகளை வீசினார்கள். அவை வெடிக்கவில்லை. இதையடுத்து தனிப்படையை சேர்ந்த போலீஸ்காரர் பாஸ்கர், சச்சினை பிடிக்க பாய்ந்தார்.

அப்போது சச்சின் அரிவாளை எடுத்து போலீஸ்காரர் பாஸ்கரின் இடது கையை வெட்டினார். இதில் வலி தாங்க முடியாமல் பாஸ்கர் கீழே விழுந்தார். நிலைமை மோசமானதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சச்சினை நோக்கி சுட்டார். அவரது துப்பாக்கியில் இருந்து 5 முறை தோட்டாக்கள் சீறி பாய்ந்தன. இதில் சச்சினின் வலது தொடையில் 2 குண்டுகள் பாய்ந்தன. அவர் ரத்த வெள்ளத்தில் அய்யோ... அம்மா... என்று அலறியபடி கீழே சாய்ந்தார்.

துப்பாக்கி குண்டு அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸ்காரர் பாஸ்கரும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி சச்சினும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ரவுடி சச்சின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது காலில் பாய்ந்த குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். இதனை தனக்கு போட்டியாக உள்ள ரவுடியை தீர்த்து கட்டுவதற்கு சச்சின் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே இந்த களேபரத்தில் சச்சினுடன் வந்த அவரது கூட்டாளியான ரவுடி பரத் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது. சென்னை அருகாமையில் ரவுடி மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். காயமடைந்த போலீஸ்காரர் பாஸ்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story