வாட்ஸ்-அப் மூலம் போலியான உத்தரவு அனுப்பி தேனி மாவட்ட கலெக்டர் பெயரில் பணம் பறிக்க மீண்டும் முயற்சி


வாட்ஸ்-அப் மூலம் போலியான உத்தரவு அனுப்பி  தேனி மாவட்ட கலெக்டர் பெயரில் பணம் பறிக்க மீண்டும் முயற்சி
x

தேனி கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி போலியான உத்தரவை அனுப்பி மீண்டும் பணம் பறிக்க முயன்ற மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தேனி

கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்-அப்

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனின் பெயரில் மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கினார். அதில் கலெக்டரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போன்று குறுஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கலெக்டர் முரளிதரனுக்கு கிடைத்தவுடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மீண்டும் குறுஞ்செய்தி

இந்நிலையில் தேனி கலெக்டரின் பெயரில் நேற்று மேலும் ஒரு மர்ம நபர் மற்றொரு தொலைபேசி எண்ணில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்றார். மேலும் அந்த நபர் கலெக்டரின் பெயரில் போலியான உத்தரவு ஒன்றை தயாரித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனின் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு 8088765749 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போலி உத்தரவு

அதேபோன்று தற்போது மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்து 7207912008 என்ற எண்ணில் இருந்து மர்ம நபரால் பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அந்த குறுஞ்செய்திகளில் அரசு அலுவலர்களை நலம் விசாரிப்பது போன்றும், இணையதள வர்த்தகத்திற்கு பணம் அனுப்பக் கேட்டும் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், சில ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் போலியான ஒரு உத்தரவை மாவட்ட கலெக்டர் அனுப்புவது போல் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதுதொடர்பாக உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டருக்கு அரசால் வழங்கப்பட்ட (சி.யூ.ஜி. எண்) 9444172000 என்ற செல்போன் எண் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே வேறு எண்ணில் இருந்து கலெக்டரின் பெயரில் தவறான செய்திகள் மற்றும் தவறான வேண்டுகோள்கள் ஏதேனும் வந்தால் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலெக்டரின் பெயரில் மீண்டும் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story