தினமும் இரவில் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி சித்ரவதை: மதுகுடித்துவிட்டு பெற்றோர் துரத்தியதால் போலீசில் தஞ்சம் அடைந்த 9 வயது சிறுமி - மதுரை கலெக்டர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் மீட்டு விசாரணை
மதுகுடித்துவிட்டு பெற்றோர் துரத்தியதால் போலீசில் 9 வயது சிறுமி தஞ்சம் அடைந்தாள். அவளை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுகுடித்துவிட்டு பெற்றோர் துரத்தியதால் போலீசில் 9 வயது சிறுமி தஞ்சம் அடைந்தாள். அவளை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துரத்திய பெற்றோர்
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்தாள்.
சிறுமியின் தந்தை கூலித்தொழிலாளி. தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். கூடவே மது பாட்டிலையும் வீட்டுக்கு வாங்கி வருவதையும் வழக்கமாக கொண்டிருந்தாராம்.
வீட்டிலும் மது குடித்த அந்த ஆசாமி, நாளடைவில் தன் மனைவிக்கும் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
போதை ஏறிய பின்பு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தினமும் 9 வயது மகளை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பல நாட்களில் மகளை இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுள்ளனர். இதனால் அந்த சிறுமி பக்கத்து வீட்டிலோ அல்லது தெருவிலோ தூங்கும் நிலை ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவும் போதையில் பெற்றோர் தங்களது மகளை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
அந்த சிறுமி வெளியே வந்த போது தெருநாய்கள் கடிக்க சூழ்ந்துள்ளன. அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் சிறுமியை மீட்டு அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவள், தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் கூறி கதறினாள்.
இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலரும், வக்கீலுமான அண்ணாநகர் முத்துக்குமார் மதுரை மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தார். அந்த புகாரில், சிறுமியை மீட்டு அவள் படிக்க ஏற்பாடு செய்து, பாதுகாப்பு அளிக்குமாறு தெரிவித்து இருந்தார்.
கலெக்டர் உத்தரவு
உடனே கலெக்டர் சங்கீதா குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் ஷோபனா, டயானா ஆகியோர் போலீஸ் நிலையத்தில் இருந்த அந்த சிறுமியை மீட்டனர்.
பின்னர் கலெக்டர் சங்கீதா போன் மூலம் சிறுமியிடம் பேசி ஆறுதல் கூறினார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரும் விசாரித்து வருகிறார்கள். பெற்றோரின் மதுப்பழக்கத்தால் சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.