செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைப்பு..!
சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்க கூடாது என்ற அமலாக்கத்துறை கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று நடைபெற்றது.
அப்போது செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தார். வாதங்கள் விவரம் பின்வருமாறு:-
செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது. அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும், அது அடிப்படை உரிமை. கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல் யாரையும் காவலில் வைக்கக் கூடாது. அமைச்சரின் கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை; இதை அரசியல் சாசன பிரிவு 15 ஏ-வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான்; உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை கடந்த ஜூன் 14ல், செந்தில்பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அமலாக்கப்பிரிவு தான். அவருக்கு போலியான அறுவை சிகிச்சை என எப்படி கூற முடியும் என்று வாதிட்டார்.
அதனைதொடர்ந்து வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.. எனவே தங்கள் தரப்புதான் முதலில் வாதங்களை முன்வைக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலாகக் கருதக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, செந்தில்பாலாஜி தரப்பு இடையே 2 மணி நேரம் காரசார வாதம் நடைபெற்றது.
இறுதியில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக பதில் வாதத்துக்காக விசாரணையை தள்ளி வைக்க அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்க கூடாது என்ற அமலாக்கப் பிரிவு கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.