செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை: நீதிபதி


செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை: நீதிபதி
x

அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த சென்னை சிறப்பு கோர்ட், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை, 3 ஆயிரம் பக்கத்திலான ஆவணங்களை டிரங்கு பெட்டியில் கொண்டு வந்து அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட செந்தில்பாலாஜி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார். அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.


Next Story