'அதிகாரிகளை மிரட்டும் தொனியில் செந்தில் பாலாஜி சத்தம் போட்டார்' கோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மனை பெற மறுத்து அதிகாரிகளை மிரட்டும் தொனியில் சத்தம் போட்டார் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் செந்தில் பாலாஜியில் கணக்கில் 1.34 கோடி ரூபாயும், அவரது மனைவி கணக்கில் 29.55 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.
இது அவர்களது வருமானவரிக் கணக்கை ஒப்பிடும்போது அதிகமானது.
கடந்த 2022-ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஒருமுறைகூட ஆஜராகவில்லை.
வாக்குமூலம்
மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணிகளுக்கு உரிய தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகத்திடம் பணம் கொடுத்துள்ளதாக சில சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலர் வேலைக்காக பெற்ற பணத்தை செந்தில் பாலாஜி மற்றும் சண்முகம் ஆகியோரின் வங்கி கணக்கில் செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
மிரட்டும் தொனியில் சத்தம் போட்டார்
இந்த பணத்தை செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
14-ந் தேதி (நேற்று முன்தினம்) சம்மன் வழங்கும்போது அதைப் பெற மறுத்த செந்தில் பாலாஜி, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் சத்தம் போட்டார்.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை
இரு சாட்சிகள் முன்னிலையில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய முயற்சித்தபோது எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
வழக்கு தொடர்பான ஆதாரங்களை கலைக்கக்கூடும் என்பதால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.