செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந்தது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை, சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந்தது.
சென்னை,
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது. அப்போது அவரது இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தது.
இதனையடுத்து காவேரி ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், உடல்நலனை கருத்தில்கொண்டு அவருக்கு உடனடியாக பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பைபாஸ் அறுவை சிகிச்சை
காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலையிலேயே அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் 7-வது தளத்தில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிகாலை 5.30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது.
இருதய அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சை காலை 10.35 மணிக்கு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.யூ. வார்டில்...
அறுவை சிகிச்சைக்கு பிறகு, செந்தில் பாலாஜி தொடர்ந்து 3 மணி நேரம் மயக்க நிலையில் இருந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருந்ததாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, அமைச்சர் செந்தில் பாலாஜி ஐ.சி.யூ. வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஐ.சி.யூ. வார்டில் 2 அல்லது 3 நாட்கள் அவர் சிகிச்சை பெறுவார் என்றும், அதன்பிறகு சுமார் ஒரு வார காலம் சாதாரண வார்டில் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த சிறிது நேரத்தில் காவேரி ஆஸ்பத்திரி செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரத்த இயக்கம் சீரானது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் அவரது இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தத்தின் இயக்கம் சீராக உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தீவிர சிகிச்சை பிரிவில், பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் - நர்சுகள் குழு அவரை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது..
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மா.சுப்பிரமணியன் பேட்டி
செந்தில் பாலாஜியின் தற்போதைய உடல் நிலை குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிர அறுவை சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜி 'போஸ்ட் ஆபரேஷன்' வார்டுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அவர் எத்தனை நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும், பொது வார்டுக்கு எத்தனை நாட்களுக்கு பிறகு அனுமதிப்பது, எவ்வளவு நாள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் டாக்டர்கள் இதற்கு பிறகுதான் சொல்வார்கள்.
சுய நினைவு
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அவரிடம் நான் எப்படி பேச முடியும்?. டாக்டர்களிடம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறேன். காலை 4 மணிக்கே அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றதில் இருந்து, நாங்கள் டாக்டர்களிடம் விவரங்களை கேட்டுக்கொண்டுதான் இருந்தோம்.
3 பெரிய கடுமையான அடைப்புகளை அகற்ற 5 மணி நேரம் ஆகியது. டாக்டர் ரகுராம் இந்த அறுவை சிகிச்சையை செய்து இருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு சுய நினைவு திரும்பிய பிறகுதான் மற்றவர்களிடம் பேசுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.