செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்ய கோரும் வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்ய கோரும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை,
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'எனது கணவர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார். கைது நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கைதுக்கான முகாந்திரங்களை தெரிவிக்கவில்லை' எனக்கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
ஏற்கனவே இந்த மனு விசாரணைக்கு வந்த போது மேகலா தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று அமலாக்கத்துறையும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தது. அதன்படி, மேகலா தரப்பில் ஐகோர்ட்டில் கூடுதல் மனு கடந்த 2 தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'ஜூன் 13-ந் தேதி இரவு 11 மணிக்கு சோதனை நிறைவடைந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில் நள்ளிரவு 1.39 மணிக்குத்தான் எனது கணவர் செந்தில் பாலாஜியை கைது செய்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இடைப்பட்ட 3 மணி நேரத்தில் என்ன நடந்தது? என்பது யாருக்கும் தெரியவில்லை. தனது அரசியல் பயணத்துக்கு எனது கணவர் பெரும் இடையூறாக இருப்பார் என்ற அடிப்படையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எனது கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பேசி வருகிறார்.
கைது செய்யப்பட்ட என் கணவரை, நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு முறையாக பரிசீலிக்கவில்லை. மாறாக அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை சட்ட விரோதமானது என அறிவித்து எனது கணவரை விடுவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதில் மனுவில், 'ஜூன் 13-ந் தேதி நடந்த சோதனையின் போது செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு. சட்டப்படி என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமோ, அந்த நடைமுறைகளை எல்லாம் முறையாக பின்பற்றிதான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜியின் மனைவி, உறவினர்களிடம் கைதுக்கான காரணத்தை தெரிவித்து விட்டோம்.
சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால்தான் அவர் கைது செய்யப்பட்டார். இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து, செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்ப போதுமான காரணங்கள் உள்ளது. பெரும்தொகை டெபாசிட் செய்யப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால் இதுவரை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அமலாக்கத்துறை மீது செந்தில் பாலாஜி தரப்பு கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது. எனவே, மேகலா தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.