செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பான விவகாரம்: மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தால் உத்தரவு நிறுத்தம் என தகவல்

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தால் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்திய பிறகு கவர்னர் இறுதி முடிவு எடுப்பார் எனவும் கவர்னர் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.