விழுப்புரம் பகுதியில் தனித்தனி விபத்து:நகை தொழிலாளி உள்பட 3 பேர் பலி
விழுப்புரம் பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் நகை தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினர்.
விழுப்புரம் கைவல்லியர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47), நகை தொழிலாளி. இவர் தனது நண்பரான யாசின்பாஷா (34) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம்- காட்பாடி மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில்வே மேம்பாலத்தை கடந்து சென்றபோது அதே திசையில் பின்னால் வந்த தனியார் பஸ், அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். யாசின்பாஷா விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி சாவு
இதேபோல் விழுப்புரம் அருகே வடவாம்பலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65), விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடவாம்பலத்தில் இருந்து சின்னமடத்திற்கு புறப்பட்டார். வடவாம்பலம் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் சென்றபோது நிலைதடுமாறி அருகில் உள்ள வேப்பமரத்தின் மீது மோதினார்.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
மேலும் விழுப்புரம் அருகே கப்பூரை சேர்ந்தவர் ராஜா மகன் அரவிந்த்ராஜ் (23). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தெளி கிராமத்தில் இருந்து சிறுவாக்கூருக்கு புறப்பட்டார். தெளி பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அரவிந்த்ராஜை அங்கிருந்தவர் கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அரவிந்த்ராஜ் இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.