கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை- ஊட்டச்சத்து பெட்டகம்
திருக்குவளை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை- ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
வேளாங்கண்ணி:
திருக்குவளை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை- ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
மருத்துவ முகாம்
திருக்குவளை அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆஸ்பத்திரி வளாகத்தில் மாபெரும் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு குடும்ப நலப்பணிகள் துணை இயக்குனர் ஜோஸ்வின் அமுதா, திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்துகொண்டு 29 கர்ப்பிணி பெண்களுக்கு காப்பு, சந்தனம், புது வளையல் உள்ளிட்ட சீர்வரிசை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-வளைகாப்பு நிகழ்ச்சியில் நான் முதன் முதலாக பங்கேற்று உள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்துவது என்னவென்றால் ஆரோக்கியமாக ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் எதிர்காலம் என்பது உங்கள் கையில் தான் உள்ளது.
ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும்
பிறந்த குழந்தை முதல் ஆறு வயது உள்ள குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்துக்களை முறையாக வழங்கி ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். இதற்காக உழைக்கும் அனைத்து மக்களுக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து பல்வேறு துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நடைபெற்ற ரத்ததான முகாமில் பயனாளிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் திலிப் மணிகண்டன், தாசில்தார் சுதர்சன், திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உறுப்பினர் மலர்வண்ணன், ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுதா அருணகிரி, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.