கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்களால் தொடர் விபத்துகள்


கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்களால் தொடர் விபத்துகள்
x

கூடலூர் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, அதிவேகத்தில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, அதிவேகத்தில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள்

கேரளா-கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது. அப்போது மலைப்பிரதேசத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல டிரைவர்கள் பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்தது. ஊட்டியில் இருந்து வரும் போது நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதனால் மலைப்பாதையில் 2-வது கியரை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசார் சாலையோரம் நின்று வெளிமாநில டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். இதனால் விபத்துகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

தொடர் விபத்துகள்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர்-கேரள சாலைகள், ஊட்டி செல்லும் சாலை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ஸ்ரீமதுரையில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒரு வேன் நம்பாலக்கோட்டை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக வேனை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி சென்று கொண்டிருந்த ஒரு கார் 2-ம் மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் மின்கம்பம் இருந்ததால் அதில் கார் தடுத்து நின்றது. இதனால் கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கடும் நடவடிக்கை

இதேபோல் பல இடங்களில் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, மலைப்பாதையில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கக்கூடாது. மேலும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story