தொடர் திருட்டு வழக்கு; பிரபல கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர்
நெல்லையில் வீடுகளில் நடந்த தொடர் திருட்டு தொடர்பாக பிரபல கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் போலீசில் சிக்கினர். இது தொடர்பாக நகைக்கடை அதிபரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லையில் வீடுகளில் நடந்த தொடர் திருட்டு தொடர்பாக பிரபல கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் போலீசில் சிக்கினர். இது தொடர்பாக நகைக்கடை அதிபரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர் கொள்ளை
நெல்லை மாநகரப்பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்தல் மற்றும் வழிப்பறி, மோட்டார் சைக்கிளில் சென்று நடந்து வரும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இதேபோல் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் வீட்டில் இருந்தவர்களை தாக்கி ஒரு கும்பல் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது.
போலீசார் தனிப்படை
இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் சதீஷ்குமார், பிரதீப் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
2 பேரை பிடித்தனர்
இந்தநிலையில் பேட்டை போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் இந்த தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தனிப்படை போலீசார் பிரபல கொள்ளை கும்பலை சேர்ந்த அவர்கள் 2 பேரையும் அதிரடியாக பிடித்தனர்.
பின்னர் அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது 100-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வேறு எங்கு நகைகளை பதுக்கி வைத்துள்ளார்கள்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகைக்கடை அதிபர்
மேலும் இந்த தொடர் கொள்ளை சம்பவம் தொடர்பாக தென்காசியை சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவரை நெல்லைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.