ஸ்கூட்டர் மீது பள்ளி பஸ் மோதல்; தாய்-2 குழந்தைகள் படுகாயம்


ஸ்கூட்டர் மீது பள்ளி பஸ் மோதல்; தாய்-2 குழந்தைகள் படுகாயம்
x

கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டர் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் தாய், 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

விபத்து

கிருஷ்ணகிரி என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 42). இவரது மனைவி பேபி (35). இவர் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குழந்தைகள் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

,இந்த நிலையில் நேற்று காலை தனது 2 குழந்தைகளையும், பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் பேபி வந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், பேபி மற்றும் அவரது 2 குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விபத்து நடந்த போது அருகிலிருந்த வீடுகளில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த விபத்து பதிவாகி உள்ளது. இவை தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story