பராமரிப்பின்றி காணப்படும் சேவை மைய கட்டிடம்
கொள்ளிடத்தில் பராமரிப்பின்றி காணப்படும் சேவை மைய கட்டிடத்தை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான சேவை மைய கட்டிடம் உள்ளது. இங்கு மகளிர் சுய உதவி குழுக்களின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்குள்ள அறைகளில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.மற்றும் ஒரு அறையில் பழைய பதிவேடுகள் மூட்டையாகக் கட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் அறைகள் முறையாக பராமரிக்காததால் கரையான் புற்று வளர்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய மேலாளர் சம்பந்தம் மற்றும் ஊழியர்கள் சேவை மைய கட்டிடத்துக்குள் சென்று ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து சேவை மைய கட்டிடம் அறையை உடனடியாக சுத்தம் செய்யவும், பாம்பு இருப்பதாக கூறப்படுவதால் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து பாம்பை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.