கார் தீ வைத்து எரிப்பு?
செம்பட்டி அருகே கார் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டி சாமிகண்ணு தெருவை சேர்ந்தவர் அஜித் (வயது 30). இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது காரை வழக்கம் போல் வீட்டருகே நிறுத்திவிட்டு சென்று விட்டார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவருடைய காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, காரில் பற்றி எரிந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இருப்பினும் கார் முழுவதும் எரிந்து எலும்புகூடானது. ஆனால் கார் எப்படி தீப்பற்றியது என்பது தெரியவில்லை. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாமிக்கண்ணுவுக்கு வேண்டாத நபர்கள் முன்விரோதம் காரணமாக, அவரது காருக்கு தீ வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.