மங்கலம்பேட்டை அருகே மாவட்ட எல்லை தாண்டி கருமகாரிய கொட்டகை அமைப்பதா? பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
மங்கலம்பேட்டை அருகே மாவட்ட எல்லை தாண்டி கருமகாரிய கொட்டகை அமைப்பதா? என்று கூறி பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மங்கலம்பேட்டை,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே சிறுவம்பார் ஊராட்சி உள்ளது. இதன் அருகில் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை உள்ளது. இங்குள்ள பாலி கிராம ஊராட்சிக்குட்பட்ட புதுக்காலனி பகுதி மக்களுக்கான கருமகாரிய கொட்டகையை அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்காமல் அருகில் உள்ள சிறுவம்பார் ஊராட்சிக்குட்பட்ட பெரிய ஏரியில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சிறுவம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி கோவிந்தராசு தலைமையில் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கருமகாரிய கொட்டைகையை பாலிகிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டுவதற்கு அந்த ஊராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்தி இரு கிராம மக்களிடையே பிரச்சினை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவம்பார் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராமமக்கள் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பணிகள் தடுத்து நிறுத்தம்
இதைத் தொடர்ந்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா, மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இரு கிராம மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட எல்லை தாண்டி கருமகாரிய கொட்டகை அமைக்கும் விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட்ட பிறகே கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும், அதுவரையில் கட்டுமான பணிகள் நடைபெற கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து கருமகாரிய கொட்டகை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.