தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,743 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,743 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பாபு உத்தரவின்பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது. திருச்சி கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பாபு மற்றும் நீதிபதிகள் வழக்குகளை விசாரித்தனர்.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்களில் 12 மக்கள் நீதிமன்ற அமர்வுகளும், முசிறி, துறையூர், லால்குடி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் மற்றும் தொட்டியம் ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு மக்கள் நீதிமன்ற அமர்வுகளும் என மொத்தம் 12 அமர்வுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரச முறையில் பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
3,743 வழக்குகளுக்கு தீர்வு
இந்த நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் நஷ்டஈடு கோரிய வழக்குகள், அரசு நில ஆர்ஜிதம் சம்பந்தப்பட்ட இழப்பீடு போன்ற பலதரப்பட்ட வகையான வழக்குகளில் நிரந்தர தீர்வு காணப்பட்டது.
மேலும் வங்கிகளின் வாராக்கடன் வழக்குகள் மற்றும் காசோலை மோசடி வழக்குகளும் என மொத்தம் 8 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் சமரச முறையில் தீர்வு காண பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மக்கள் நீதிமன்ற அமர்விலும் தற்போது பணியில் உள்ள மாவட்ட நீதிபதி மற்றும் சார்பு நீதிபதிகள் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் தலைமையில், கமிட்டி செயல்பட்டு, இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து வங்கிக்கடன் வழக்குகளில் ரூ.3 கோடியே 37 லட்சத்து 74 ஆயிரத்து 34, நீதிமன்ற நிலுவையில் இருக்கும் வழக்குகளில் ரூ.23 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 141 என மொத்தம் ரூ.26 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 175 மதிப்பிலான வழக்குகளை வழக்காடிகள் பயன்பெறும் வகையில் நேற்று 3,743 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.