திருசசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 107 வழக்குகளுக்கு தீர்வு
திருசசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 107 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டன.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 107 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டன.
மக்கள் நீதி மன்றம்
திருச்சி மாவட்டத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பாபு தொடங்கி வைத்தார். திருச்சி நீதிமன்றத்தில் 1 மக்கள் நீதிமன்ற அமர்வு, முசிறி, துறையூர், லால்குடி, மணப்பாறை, நீதிமன்றங்களில் தலா ஒரு மக்கள் நீதிமன்ற அமர்வும் என மொத்தம் 5 அமர்வுகள் நடந்தது.
இதில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரச முறையில் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. இந்த நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் உள்ள உரிமையியல் சம்பந்தமான வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள், குடும்பநல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், பங்கேற்ற இருதரப்பினர்களிடையே சமரம் பேசி தீர்வு காணப்பட்டன.
சமரச முறையில் தீர்வு
வங்கி மற்றும் நிதிநிறுவனம் தொடர்பான 507 வழக்குகள் சமரச முறையில் தீர்வுகாண பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மக்கள் நீதிமன்ற அமர்விலும் தற்போது பணியில் உள்ள மாவட்ட நீதிபதி மற்றும் சார்பு-நீதிபதிகள் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் தலைமையில், கமிட்டி செயல்பட்டு, இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து 107 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. காசோலை மோசடி வழக்குகளில் ரூ.15 லட்சத்து 72 ஆயிரத்து 588, மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகளில் ரூ.1 கோடியே 59 லட்சத்து 14 ஆயிரம், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகளில் ரூ.71 லட்சத்து 95 ஆயிரத்து 485, உரிமையியல் சம்மந்தமான வழக்குகளில் ரூ.41 லட்சத்து 28 ஆயிரத்து 820, வங்கி மற்றும் நிதிநிறுவன வழக்குகளில் ரூ.16 லட்சத்து 33 ஆயிரத்து 783 என மொத்தம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 676 சமரசம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டன.