மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 193 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திண்டுக்கல்


தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி நேற்று மாநிலம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதையொட்டி நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள், மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வாகன விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி வராக்கடன்கள், குடும்ப நல வழக்குகள் உள்பட சுமார் 2 ஆயிரத்து 500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.


இந்த வழக்குகள் மீது விசாரணை நடத்துவதற்காக திண்டுக்கல், பழனி, வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதையடுத்து அந்த வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரும் அழைக்கப்பட்டு நீதிபதிகள் தலைமையிலான அமர்வுகளில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்மூலம் வழக்குகளில் சுமுக தீர்வு காணப்பட்டது.


வழக்குகள் தீர்வு


திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை தாங்கினார். மேலும் தீர்வு காணப்பட்ட வழக்குகளில் பெறப்பட்ட இழப்பீட்டு தொகைக்கான உத்தரவை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் நீதிபதி வழங்கினார்.


இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், மகிளா கோர்ட்டு நீதிபதி சரண், குடும்ப நல நீதிபதி விஜயகுமார், வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி ஜான்மினோ, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான பாரதிராஜா, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா, நீதிபதிகள் விஸ்வநாத், ரெங்கராஜ், சவுமியாமாத்யூ, வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


வேடசந்தூர்


இதேபோல் வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வேடசந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு சட்ட பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதிபதியுமான சரவணகுமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறிப்பாக வாகன விபத்து, கல்வி கடன், வங்கி வராக்கடன் உள்பட மொத்தம் 226 வழக்குகளுக்கு நேற்று தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.22 லட்சம் தீர்வு தொகையாக வழங்கப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி சசிகலா, வக்கீல்கள் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் பாலமுருகன், இணை செயலாளர் ராஜேஸ்வரன், முன்னாள் செயலாளர் தங்கவேல் முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 193 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தீர்வு தொகையாக ரூ.4 கோடியே 7 லட்சத்து 85 ஆயிரத்து 675 வழங்கப்பட்டது.



Next Story