மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகளுக்கு சமரச தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.4 கோடியே 17 லட்சம் வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.4 கோடியே 17 லட்சம் வழங்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் படி திருச்சி மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பாபு தொடங்கி வைத்தார். இதில் அனைத்து மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள், அனைத்து சங்க நிர்வாகிகளும், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி, லால்குடி, துறையூர், மணப்பாறை, முசிறி ஆகிய 5 இடங்களில் நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தில் பலவகையான வழக்குகள் பொதுமக்கள் பயனடையும் வகையில் சமரசமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
67 வழக்குகள் முடிவுற்றது
இதில் நீதிமன்ற நிலுவையில் உள்ள மோட்டார் வாகன வழக்குகள், நஷ்டஈடு வழக்குகள், தொழிலாளர் நிவாரண வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள், மற்ற உரிமையியல் சம்பந்தமான வழக்குகள், நுகர்வோர் வழக்குகள் என 346 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 67 வழக்குகள் முடிவுற்றது. இந்த வழக்குகளில் மொத்தம் ரூ.4 கோடியே 17 லட்சத்து 7 ஆயிரத்து 669 முடிவுற்ற தொகை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், (பொறுப்பு) 4-வது கூடுதல் சார்பு நீதிபதியுமான மணிகண்டராஜா செய்திருந்தார்.