சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலத்துக்கு பாதிப்பு வரக்கூடாது கடலூரில் எச்.ராஜா பேட்டி
சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்று கடலூரில் எச்.ராஜா பேட்டியளித்துள்ளாா்.
இந்து மக்கள் கட்சி சார்பில் கடலூரில் நேற்று சனாதன இந்து தர்மம் பாதுகாக்கும் அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகளிர் கருத்தரங்கம் மற்றும் திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் வள்ளலாரின் 200-வது அவதார விழாவும், கல்வியாளர் கருத்தரங்கமும் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் அவர்களின் நலனுக்காக சேதுசமுத்திர திட்டத்தை பற்றி பேசி உள்ளனர். இதற்கு முன்பு ரூ.27 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறிய நிலையில், தற்போது ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு என்ன மிச்சமாகும் என்பதை ஆராய வேண்டும். இத்திட்டத்திற்காக முதலில் நிபுணர் குழு அமைத்து, அத்திட்டம் சாத்தியமா என முடிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தால் ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழை தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தமிழை தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம். அதற்கு முன்பாக தமிழை தொலைத்தவர் யார்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழை எங்கு தேடினால் கிடைக்கும் என்ற விவரத்தையும் அவரிடம் சொல்ல உத்தேசித்திருக்கிறேன். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து வருகிற 31-ந் தேதி கூடும் பா.ஜ.க. மாநில மையக் குழுவில் தான் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.