தண்ணீர் லாரியை எதிர்பார்த்து காலிகுடங்களுடன் காத்திருக்கும் பெண்கள்: நாகர்கோவில் மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
நாகர்கோவில் மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீர் லாரியை எதிர்பார்த்து காலிகுடங்களுடன் கால் கடுக்க காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நாகா்கோவில்,
நாகர்கோவில் மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீர் லாரியை எதிர்பார்த்து காலிகுடங்களுடன் கால் கடுக்க காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. தற்போது மாநகராட்சியுடன் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக ரூ.251 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே தற்போது முக்கடல் அணை நீர்மட்டம் கோடை வெப்பத்தின் காரணமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 0.30 அடியாக உள்ளது. நாகர்கோவில் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமே முக்கடல் அணை தான். அந்த அணையில் தண்ணீர் குறைந்ததால் 15 நாட்களுக்கு ஒரு முறை நாகர்கோவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் ஒரு சில இடங்களில் 20 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
இதனால் மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காலிக்குடத்துடன் வரிசையில் நின்ற மக்கள்
அதே சமயத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி மூலம் லாரிகளில் ஒவ்வொரு பகுதியாக சென்று குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வடசேரி சோழராஜா கோவில் தெரு வுக்கு நேற்று லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் முண்டியடித்தபடி நீண்ட வரிசையில் குடங்களுடன் காத்திருந்து தண்ணீரை பிடித்து சென்றனர்.
இதேபோல் எங்களுடைய பகுதிக்கும் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என காலிகுடங்களுடன் பெண்கள் காத்திருக்கிறார்கள். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது நாகர்கோவில் மாநகர பகுதியில் சேதமடைந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து அதன் மூலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தினமும் 50 கன அடி தண்ணீர் வருகிற 25-ந்தேதி முதல் குடிநீருக்காக திறக்கப்பட உள்ளது. அதன்பிறகு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
இதுகுறித்து மாநகர மக்கள் கூறுகையில், கோடை காலத்தில் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமான கதையாகி உள்ளது. இதற்கு மாநகர நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும். குடிநீர் இல்லாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள். நீர் நிலை மற்றும் பொது குழாய்களில் வரும் குடிநீரை வாகனங்களில் சென்று குடம் மற்றும் பெரிய கேன்களில் பிடித்து வரும் நிலை உள்ளது. இதுதவிர ரூ.50 கொடுத்து தான் கேன் தண்ணீர் வாங்க வேண்டி உள்ளது. குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த நிலையில் மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது, சற்று ஆறுதல் அளிக்கிறது என தெரிவித்தனர்.