ஊட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி


ஊட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நீலகிரி

ஊட்டி,

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு தொடா் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதனால் டிக்கெட் கவுண்ட்டர்களில் நுழைவு டிக்கெட் பெறவும், படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஊட்டியில் தினமும் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலானோர் சொந்த வாகனங்களில் வந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி-குன்னூர் சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய சுற்றுலா தலங்களுககு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். மேலும் நகரில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், சுற்றி, சுற்றி வந்ததாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பஸ்கள் தாமதம்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், கூடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் கடந்த 3 நாட்களாக ஏற்பட்டு உள்ளது. இதனால் மலப்புரம், கோழிக்கோடு, மைசூரு மற்றும் ஊட்டி செல்லும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக செல்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்கிறது. போலீசார் முக்கிய இடங்களில் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, சாலையோரம் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி வைக்க கூடாது என்றனர்.


Next Story