திருமங்கலம் அருகே ஆக்கிரமிப்பால் சமுதாய கூடத்தில் தேங்கிய கழிவுநீர்
திருமங்கலம் அருகே ஆக்கிரமிப்பால் சமுதாய கூடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கிராமம் திருமால். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள வீதிகளில் கழிவு நீர் கால்வாய் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. அத்துடன் தெருகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களால் கழிவு நீர் கால்வாய்கள் அடைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கழிவுநீர் சாக்கடைகளில் தேங்கியுள்ள நீர் அருகில் உள்ள சமுதாய கூடத்திற்கு சென்று குளம்போல் தேங்கியுள்ளது. அத்துடன் கொசு உற்பத்தியாகி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் பேச்சு ராசு கூறுகையில், வீதிகளில் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு சமுதாய கூடத்தில் செல்கிறது. ஆக்கிரமிப்பு மற்றும் வீடுகளின் முன்புறம் கழிவுநீர் வாய்க்காலில் சிலர் அடைப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனை அகற்ற பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் தடுக்கப்படும் என்றார்.