பாதாள சாக்கடை மூடி வழியாக வெளியேறிய கழிவுநீர்
வேலூரில் பாதாள சாக்கடை மூடி வழியாக வெளியேறிய கழிவுநீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லேசான மழை
வேலூரில் காலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்ததது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பல இடங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். மழைநீர் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடியது.
நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவதால் கழிவுநீர் கால்வாயில் செல்லும் மழைநீர் பாதாள சாக்கடையில் சேர்ந்து சென்றது. வேலூர்- காட்பாடி சாலையில் நேஷனல் தியேட்டர் பகுதி வழியாக செல்லும் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கழிவுநீர்
இதனால் நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே சாலையின் நடுவே இருந்த பாதாள சாக்கடை குழாய் மூடி வழியாக மழைநீருடன் கலந்த கழிவு நீர் பொங்கி வழிந்தது சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதியடைந்தனர். போக்குவரத்தும் பாதிப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் குழாய் மூடியை சுற்றி பேரி கார்டுகள் வைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மழையின் காரணமாக அதிகப்படியான நீர் குழாயில் சென்றது. எனவே மூடியில் இருந்து தண்ணீர் வெளியேறியது. நேரம் செல்ல செல்ல தண்ணீர் வெளியேறுவது குறைந்து விட்டது என்றனர்.