குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீர்
மாற்று வழி ஏற்படுத்தாமல் பாலம் கட்டும் பணி நடந்ததால் குடியிருப்புக்குள் கழிவுநீர் புகுந்தது.
கொள்ளிடம் டோல்கேட், ஆக.21-
மாற்று வழி ஏற்படுத்தாமல் பாலம் கட்டும் பணி நடந்ததால் குடியிருப்புக்குள் கழிவுநீர் புகுந்தது.
புதிய பாலம்
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே சங்கரா நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் குறுக்கே பழுதான நிலையில் இருந்த பழைய பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே இடத்தில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினால் கழிவுநீர் கால்வாயின் குறுக்கே குழி தோண்டப்பட்டது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் முற்றிலும் தடைபட்டது. கழிவுநீர் தடையின்றி செல்ல முன்னேற்பாடாக மாற்று வழி ஏற்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த பாலம் கட்டும் பணியினால் கால்வாயில் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் கழிவுநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
கழிவுநீர்
மேலும் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் இந்த கழிவு நீரினால் சுற்று வட்டார பகுதிகளில் அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் தரைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்கள் கழிவு நீரில் மூழ்க தொடங்கியுள்ளது. இதனால் கழிவு நீரில் நடந்து சென்று தங்களது வாகனங்களை எடுக்கும் குடியிருப்பினர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அவல நிலை உருவாகியுள்ளது.
கோரிக்கை
குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்குழாயில் கழிவுநீர் புகுந்ததால் குடிதண்ணீரை பயன்படுத்த முடியாமல் குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தரை தளத்தை சூழ்ந்த கழிவு நீரால் அடுக்குமாடி குடியிருப்பு பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கும் லிப்டில் உள்ள மின் ஒயர்கள் கழிவு நீரில் படுவதால் அதில் மின்சாரம் பாய்ந்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.