ரேஷன் கடை முன்பு வழிந்தோடும் கழிவுநீர்


ரேஷன் கடை முன்பு வழிந்தோடும் கழிவுநீர்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் ரேஷன் கடை முன்பு கழிவுநீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூரில் ரேஷன் கடை முன்பு கழிவுநீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

ரேஷன் கடை

குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளது. இந்த பகுதிகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். இதில் அந்தந்த வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், சில வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த கோரிக்கையை அந்த வார்டு கவுன்சிலர், நகரமன்ற கூட்டத்தில் கூறியும், நிதியும் ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில 5-வது வார்டிற்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

வழிந்தோடும் கழிவுநீர்

இந்த ரேஷன் கடையில் 4, 5, 6, 13 ஆகிய 4 வார்டுகளை சேர்ந்த 800 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன் அருகே பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் இருந்து கழிவுநீர் செல்ல நிலத்துக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு, கால்வாயில் செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் மற்றும் குழாய் உடைந்து உள்ளதால், ரேஷன் கடை முன்பு வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குழாயில் இருந்து கழிவுநீர் தொடர்ந்து வெளியேறுவதால், ரேஷன் கடைக்கு சென்று வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல், மூக்கை பொத்தியபடி செல்கிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக கழிவுநீர் வழிந்தோடுவதால், பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் செல்ல குழாய் மற்றும் கால்வாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story