குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலக்கிறது


குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலக்கிறது
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குடிநீர் கிணறு

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட அரவேனு அருகே மேல் ஆடுபெட்டு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 90 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக குஞ்சப்பனை ஊராட்சி சார்பில் சக்கத்தாகம்பை கிராமத்தில் உள்ள தாழ்வான பகுதியில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடந்த 20 ஆண்டுகளாக மின்மோட்டார் மூலம் ஆடுபெட்டு கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, கிராம மக்களுக்கு வினியோகம் செய்யபட்டு வருகிறது.

கழிவுநீர்

இந்த குடிநீர் கிணற்றுக்கு அருகில் நீரோடை ஒன்று செல்கின்றது. இதில் அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், அந்த ஓடை தண்ணீர் அசுத்தமடைந்து எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. இந்த ஓடை தண்ணீர் கசிந்து கிணற்றில் கலந்து வருவதால், அதில் உள்ள தண்ணீரும் எண்ணெய் பசையுடன் மாறி வருகிறது. மேலும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது.

நடவடிக்கை

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

எங்களது கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணற்றுக்குள், எண்ணெய் பசை கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்து வருகிறது. இதன் காரணமாக அந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளது. அதையும் மீறி குடித்தால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

எனவே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஓடையை தூர்வாருவதுடன் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஓடையில் விடுவதை தடுக்க வேண்டும். மேலும் கிணற்று தண்ணீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story