தண்ணீரில் கலந்து செல்லும் கழிவுநீர்


தண்ணீரில் கலந்து செல்லும் கழிவுநீர்
x

வேலூர் பாலாற்றில் தண்ணீருடன் கலந்து செல்லும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

வேலூர்

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாலாற்று கரையோரம் உள்ள வீடுகள், தரைப்பாலங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாக துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

மேலும் பொதுமக்களுக்கும் அவ்வப்போது வெள்ளம் எச்சரிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டது. வேலூரில் இடைவிடாது கொட்டி தீர்த்த மழையால் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பாலாற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரைக் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தண்ணீரில் கலக்கும் கழிவுநீர்

இந்த நிலையில் சமீப காலமாக மழை இல்லாததால் வேலூர் பாலாற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியது. வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் பாலத்தின் கீழ்பகுதியில் பாலாற்று தண்ணீரில் கழிவு நீர் கலந்து செல்கிறது.

இதனால் சலவை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் குளிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது தவிர சிறுவர்கள் ஆற்றுத் தண்ணீரில் மீன் பிடிக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. மேலும் ஆற்றங்கரை ஓரம் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, பாலாற்றை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story