தெருவில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
வெங்குப்பட்டு கிராமத்தில் தெருவில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த வெங்குப்பட்டு கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தெரு பகுதியில் 50-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் இருந்த வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் அமைக்காததால் தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வருடத்துக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி நடந்து செல்லக்கூட சிரமமாக உள்ளது. அவ்வப்போது ஒரு சிலர் கீழே விழுந்து அடிபடுவதாகவும் தெரிவித்தனர். கழிவுநீரை அகற்றி முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் அதிகாரிகள் வந்து பார்ப்பதோடு சரி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சோளிங்கர் தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகதத்திடம் கடந்த மாதம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலையிட்டு, உடனடியாக கழிவு நீரை அகற்றி சரியான கால்வாயை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போன்று அந்த தெருவில் உள்ள ஒரு சிறிய பகுதியை சீரமைத்து சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.