சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
அருப்புக்கோட்டையில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவு நீர் கால்வாய்
அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட புறவழிச் சாலையை இணைக்கும் சாலையில் எம்.டி.ஆர் நகர், வசந்தம் நகர், ஜோதிபுரம் வழியாக செல்லும் சாலையில் கழிவு நீர் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல், கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
நோய் பரவும் அபாயம்
சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே உடனடியாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி கழிவு நீர் முறையாக செல்ல நடவடிக்கை மேற்கொள்வதோடு சாலையையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.