கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
உடுமலை
உடுமலை நாராயணன் காலனி பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நாராயணன் காலனி
உடுமலை நகராட்சி பகுதியில் பழனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நாராயணன் காலனி.
இங்குள்ள கழுத்தறுத்தான் பள்ளத்தை (ஓடை) ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.மழை காலங்களில் இந்த பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.தண்ணீர் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும்.
இந்த நிலையில் உடுமலை நகராட்சியின் நூற்றாண்டு விழா நினைவாக வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டதில் கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர் வாரி கரையின் இரண்டு பக்கமும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஒருபகுதியில் முடிவதற்குள் அடுத்தபகுதியில் பணிகள் தொடங்கப்படுகின்றன.மேலும் அடிக்கடி பணிகள் நிறுத்தப்படுகின்றன.
நோய் பரவும்
இந்த நிலையில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு பின்புறம் பணிகள் பாதியில் நிற்கிறது.அதனால் அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.அதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது மட்டுமின்றி துர்நாற்றம் வீசுகிறது. நோய்பரவக்கூடிய சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் வீட்டில் இருந்து பள்ளத்தை கடந்து வெளியில் சென்று வருவதற்கும் வழியில்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதனால் அவர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியில் சென்று வருவதற்கு நடைபாதைக்காகபள்ளத்தின் குறுக்கே மரப்பலகையை வைத்துள்ளனர்.அதில் குழந்தைகள் நடந்து வருவது சிரமம்.
கோரிக்கை
அதனால் அங்கு கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர்வாரி இரண்டு புறமும் கான்கிரீட் தடுப்புசுவர் கட்டும் பணிகளை முழுமையாக செய்துமுடிக்க வேண்டும் என்று அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.